Tuesday 1 May 2012

தஞ்சை ரயில்கள் – மக்கள் எண்ணம்



தஞ்சாவூர் – விழுப்புரம் அகல ரயில் பாதை முடிந்து 2 வருடங்கள் ஆகியும், போதுமான ரயில் வசதி இம்மாவட்ட மக்களுக்கு கிடைக்கவில்லை.

மன்னை, ராமேசுவரம், திருச்செந்தூர், மதுரை விரைவுவண்டிகளில் மிக குறைவான இருக்கைகளே குடந்தை, தஞ்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் வண்டியில் மிக குறைவான பெட்டிகளே உள்ளன. மலைகோட்டை விரைவுவண்டியில் பெரும்பகுதி திருச்சிக்கு ஒதுக்கப்படுகிறது.

பகல் வேளையில் செல்லும் திருச்சி (சோழன்) வண்டியில் ‘படுக்கை வசதி’ பெட்டிகள் இணைக்கப்பட்டு ரூ.170 கட்டணம் வாங்கப்படுகிறது. இதனால், தஞ்சை மாவட்டம் செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

மயிலாடுதுறை-திருவாரூர் அகலப்பாதை முடிந்ததும் (30 கி.மீ அகலப்பாதை பணிகள் 2 வருடங்களுக்கு மேலாக நடைபெறுகிறது) மன்னை, காரைக்கால் விரைவுவண்டி குடந்தை, தஞ்சை வழியே இயங்காது. மேலும் மக்களுக்கு நெருக்கடி உண்டாகும்.

மீட்டர் இருப்புப்பாதை காலத்தில் இயக்கப்பட்ட சென்னை-தஞ்சாவூர், சென்னை-செங்கோட்டை, செங்கல்பட்டு-திருச்சி பாசஞ்சர் வண்டிகளை மீண்டும் இயக்க வேண்டும். மதுரை-திருப்பதி, சென்னை-கொல்லம், சேது (சென்னை-ராமேசுவரம்), நாகூர்-கொல்லம், நாகூர்-பெங்களூர்(கடலூர்,விருத்தாச்சலம் வழி) விரைவுவண்டிகளை மீண்டும் இயக்க வேண்டும். திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரயில் பாதை ஒரே வருடத்தில் (2012-13) முடிக்கப்படவேண்டும். 150 கி.மீ திருச்சி-காரைக்கால் அகலப்பாதை முடிய 1998-2012 என 14 வருடங்கள் ஆனதுபோல், திருவாரூர்-காரைக்குடி ஆகிவிடக்கூடாது. கம்பன் (சென்னை-காரைக்குடி), மனோரா(சென்னை-பட்டுக்கோட்டை), போட் மெயில் (சென்னை-ராமேசுவரம்) வண்டிகள் இந்தப் பாதையில் இயங்க வேண்டும்.

பெயர் குழப்பம்:
தென்னக ரெயில்வே பழைய தமிழ்ப் பெயர்களை விடுத்து, ஊரின் பெயர்களை வண்டிகளுக்கு வைப்பதால் குழப்பம் நிலவுகிறது. சோழன் (வண்டி எண் 6854), செந்தூர் (6736), கம்பன் (6176), ராமேசுவரம்(6702), மதுரை-சென்னை (2794) ஆகிய விரைவுவண்டிகளை ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடுவதால் பயணச்சீட்டு வாங்குவதில்-ரயில் ஏறுவதில் என சிக்கல் எற்படுகிறது. தஞ்சாவூரில் இரவு 10.30, 11.30, 12.30, காலை 5.00, காலை 10.00 – என 5 விதமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்களால்’ தடுமாற்றமே ஏற்படுகிறது.

எனவே ரயில்களுக்கு சோழன், கம்பன், செந்தூர், ராமேசுவரம் ஆகிய பழைய தமிழ்ப் பெயர்களால் மீண்டும் பெயரிட வேண்டும். மேலும் மதுரை-சென்னை (2794) ‘கூடல் விரைவுவண்டி’ , மதுரை-திருப்பதி (6780) ‘மீனாட்சி விரைவுவண்டி’ , ராமேசுவரம்- சென்னை(6714) ‘சேது விரைவுவண்டி’  என பழைய பெயர்களை மேண்டும் நிலைநாட்ட வேண்டும். மக்களுக்கும் வண்டியின் பெயர் சொல்லி சீட்டு எடுக்க, விசாரணை செய்ய, முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.