Saturday, 22 June 2013

நடிகை லீனாவின் பேட்டி3

பேட்டி 3

நடிகை லீனாவும், அவள் அம்மா சம்பங்கியும் அமைச்சர் வேலவன் முன் பதைபதைப்பாக நின்றிருந்தனர்.  ’தமிழ் நேசன்’ படித்துக்கொண்டிருந்த அமைச்சர் வேலவன் “என்ன லீனா…..இவ்வளவு படபடப்பு? இல்லையா படப்பிடிப்பு?” என்றார் கவித்துவமாக.

 சம்பங்கி ”லீனா ……போன வாரம் ‘திரைப்பூ’வுக்கு ஒரு பேட்டி கொடுத்தாள். அது இப்போ பெரிய ப்ரச்னை ஆயிடுச்சு” என படபடத்தாள்.

“பேட்டியும் போட்டியும் திரையுலகில் சகஜம்தானே?”

”அய்ய…இவ கொடுத்த பேட்டியை அந்த நிருபர் விமலன் பதிவு செய்து மிரட்டறான்”

”அப்படி என்ன கண்ணு சொன்னே? அரசியல் வசனம் ஏதும் பேசிட்டியா” 

”அய்யோடா …. நான் சொன்னது என்னன்னா ‘குச்சுப்புடி கலை தெரிந்ததால் திரை உலகில் முன்னேற முடிந்தது’ என்று. அந்த மண்டு நிருபர் அதை பதிவு பண்ணிட்டு இப்ப மிரட்டறான்”  லீனா ரீவைண்ட் செய்தாள்.

”இதுல என்ன தவறு? எதுக்கு அந்த விமலன் உன்னை மிரட்டணும்?” வேலவன் குறுக்கிட்டார்.

” அது…..அது வந்து…………” லீனாவின் பெரிய விழிகள் மேலும் விரிந்தன.
“சொல்லு கண்ணு. சொன்னால்தானே சரி செய்ய முடியும். உன்னை மாதிரி தமிழ் நங்கைகளுக்கு உதவதானே அமைச்சர் பதவி”

“……………..” லீனா தலை குனிந்தபடி நின்றாள்.

அமைச்சர் சம்பங்கியை நோக்கினார்.

”சார் ………. ‘குச்சுப்புடி கலை தெரிந்ததால் திரை உலகில் முன்னேற முடிந்தது’ என்று இவள் சொல்றப்ப ‘குச்சுப்புடி’க்கு பதிலா நாக்குழறி மாற்றிச் சொல்லிட்டா. இப்ப என்ன பண்றது?” சம்பங்கி கேட்டாள்.

வேலவன் சிரித்து விட்டார். லீனாவை மேலும் கீழும் பார்த்தார் 

”குச்சுப்புடிக்கு பதிலா என்ன கண்ணு சொன்னே?”

“சார் …போங்க சார்” என்று லீனா தவிப்பதை ரசிப்பதை விட்டு சுதாரித்தார்.
சம்பங்கி “அய்யோ… இதை பெரிசுபடுத்தி விமலன் போடறதா மிரட்டறான். 10 லட்சம் பணம் கேக்குறான். இது தெரிஞ்சா மற்றவளுங்க லீனாவை மதிப்பாளுகளா? ஏகத்துக்கு வடனாட்டு குட்டிங்க கோடம்பாக்கத்துல  குந்தியிருக்காளுக. இதுல இவ பேரு ரிப்பேர் ஆனா என்ன பண்றது” என ஒப்பாரி வைத்தாள்.

லீனா பல்லைக் கடித்தாள். ”அம்மா புலம்பாத” என்றபடி அமைச்ச்ரிடம் தேன் தடவினாள் “சார்… சார் .. இந்த சின்ன ப்ரச்னையை நீங்கதான் தீர்த்து வைக்கணும்…”

அமைச்சர் வேலவன் யோசித்தார் ”திரைப்பூ குழு ‘வசந்த மாளிகை’னு பொத்தேரியில ஒரு ஓட்டல் கட்டறான். இரு அவனை கொக்கி போடலாம்” என்று செல்பேசியை தட்டினார்.

“ஆமா…….உங்க ஓட்டல் விஷயம்தான் ………………..சீக்கிரமா வாங்க”

அமைச்சர் கையமர்த்தினார் “ லீனா ……. சாப்பிடு. காலையில் வெறும் வயிறாக இருக்கக் கூடாது.” என்றவர், சம்பங்கி நகர்ந்ததும் லீனாவிடம் “கவர்ச்சிப் பாடலில்தான் வெறும் வயிறோடு இருக்கலாம்” என்று கிசுகிசுத்தார்.

லீனாவின் வெட்கத்தை ரசித்தபடி “நீங்களே சாப்பிடுங்க” என இருவருக்கும் உணவு மேசைக்கு வழிகாடினார். தாயும் மகளும் கம்பு இட்லிகளை பதம் பார்க்கத் தொடங்கினர்.

சிறிது நொடியில் ஒரு நெடிய மனிதர் செண்ட் நெடியுடன் வந்தார் “ 

சார்….ஐ ஆம் மேனன். ‘திரைப்பூ’ ஓனர். பொத்தேரியில் ஓட்டல் கட்டிக்கிட்டு இருக்கேன்” என்றபடி அறிமுகம் ஆனார்.

அமைச்சர் “உட்காருங்க. உங்க ‘வசந்த மாளிகை’ விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. சில சான்றிதழ்கள் சேர்க்கப்படவில்லை.” என்றபடி ஃபைலை டீப்பாய் மேல் போட்டார்.

NOT APPROVED – என எழுதி கையொப்பம் இட்டிருந்தார் அமைச்சர்.

மேனன் படபடத்தார் “சார்…..எங்க வசதிக்கு ஊருக்கு வெளியேதான் ஓட்டல் கட்ட முடியும். ப்ளீஸ்……அனுமதி கொடுங்க சார்”

”ம்….அப்ப நடிகை லீனாவின் தவறான பேட்டியை காரணம் காட்டி நீங்களும் உங்க நிருபன் விமலனும் மிரட்டலாமா?” அமைச்சர் கணை வீசினார்.

மேனன் இந்த கணைக்கு சுருண்டார் “சார்…. இப்பவே விமலனை அந்த காசட்டை உங்களிடம் ஒப்படைக்கச் சொல்றேன்” என்றபடி செல்பேசியை உசுப்பினார்.

“விமலன்….எங்கே இருக்க..”

“நடிகர் சேதுகாந்த் 35வது பிறந்தநாளை கவர் பண்றியா? போதும்……..லாஸ்ட் 5 இயர்ஸா 35வது பிறந்தநாளை அவர் ரசிகர்கள் கொண்டாடறாங்க…..நீ கவர் பண்ணது போதும்”.

“உடனே லீனா பேட்டியின் காசட்டோடு அமைச்சர் வேலவன் சார் வீட்டுக்கு வா”

மேனன் அமைச்சரை நோக்கினார் “சார்….ப்ராப்ளம் சால்வ்டு”

“அப்ப நானும் உங்க ஓட்டலுக்கு ஈ தரப் போறேன்” என்றபடி அமைச்சர் ஃபைலை எடுத்தார்.

மேனன் புரியாமல் விழிக்க “ஈ….ன்னா என்னா சார்?” என ‘ஈ’யென வழிந்தார்.

அமைச்சர் சிரித்தபடி பேனாவை எடுத்தார் “லீனாவுக்காக பேனா எடுத்தேன்” என சத்தமாய் சொல்லியபடி NOT APPROVED – ல் ஒரு ‘E’ சேர்த்தார்.

இப்போது ஃபைல் NOTE – APPROVED என மாறியது. மேனன் முகம் வெளிச்சம் ஆனது.

விமலன் பவ்யமாக ஆஜரானான் “ஹி….ஹி…சார் காசட் இந்தாங்க”
“சரிடா விமல்……….முருகன் பெயர் கொண்ட அமைச்சருடன் கண்ணழகு நடிகை நெருக்கம்னு போட்றாத. நெருக்கத்தை வெறுக்குற வருக்கம் எங்க கட்சி” என்றார் வேலவன்.

இந்த கசமுசா எல்லாம் முடிந்ததும் -  லீனாவும் சம்பங்கியும் வெளிவந்தனர்.

“சார்…. ரொம்ப நன்றி” என்றபடி லீனா ஓடிவந்து வேலவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். சம்பங்கியும் ‘தமிழ் நேசன்’ படிப்பது போல் பாசாங்கு செய்தாள்.

“கண்ணு … இனிமே பேட்டிலாம் பாத்துக் குடு” என லீனா முதுகை தட்டிக் கொடுத்தபடி சொன்னார் வேலவன்.

சம்பங்கி நான்காவது முறையாக கனைத்துக் காட்டியதும், வேலவன் கழுத்தை லீனா விடுவித்தாள்.   
************************





Monday, 27 May 2013

நடிகை லீனாவின் பேட்டி2


பேட்டி 2
”லீனா …. பேட்டிக்கு தயாரா?” ‘திரைநிலா’ நிருபர் சுக்ரீவன் வெற்றிலை குதப்பியபடி கேட்டார்.

“இதோ … வந்துட்டேன் சார்” – லீனாவின் அம்மா சம்பங்கி பரபரத்தாள் “ கதாநாயகியா  ’அடியேனை பாரம்மா’ படத்துல அறிமுகமாகுறா. கொஞ்சம் விலாவாரியாக லீனாவின் பேட்டிய போடுங்க அண்ணா”

லீனா பேட்டியின் ஆரம்பத்தில் சற்று மிரண்டு போயிருந்தாள்.

சுக்ரீவன் கனைத்துக் கொண்டார் “குழந்தை நட்சத்திரம், குமரி நட்சத்திரம் – இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உணர்றீங்க?”

லீனா – “ ‘அங்க்கிள்…..என்ன கண்டுபிடிங்க’ன்னா குழந்தை நட்சத்திரம்; ‘மாமா….என்ன கட்டிப்பிடிங்க’ன்னா குமரி நட்சத்திரம்”

“அதில்ல லீனா……………….. கதாநாயகியா ஆனதும் உன் பொறுப்பு கூடியிருக்கும். அதை சொல்லு”

“குழந்தை நட்சத்திரம் கேரக்டரில் நடிக்கும்போது பொறுப்பாய் பேசுவேன் – ’வாழ்க்கைப் படகை அம்மா அப்பா என இரு துடுப்புகள் செலுத்தணும்’…………..’குடும்பம் ஒரு கோவில், பெண் ஒரு குத்துவிளக்கு’……………’மகிழ்ச்சி ஒரு பாதை, இலக்கு இல்லை”

“ஆனா குமரி நட்சத்திரம் ஆனதும் ‘உன்னை மோதியதில் என் இடுப்பு பிடிச்சுகிடுச்சு, உன்னையும் எனக்கு பிடிச்சுகிடுச்சு’……………………’முத்தம் என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும்’…………………..’தாடியோட நீயும் டாடியோட நானும் சுத்துரோம்’ என பொறுப்பில்லாமல் வசனம் பேசுவேன்” 

சுக்ரீவன் மேவாயை சொறிந்தார் “என்னமோ இடிக்குதே”. சம்பங்கி சொன்னாள் “அண்ணா….. நாந்தான் மோர் கொண்டு வர்றப்ப இடிச்சுட்டேன்”

“அதில்ல…. லீனா விளையாட்டா பதில் சொல்றா”

“அண்ணா….. எத்தனை இந்திக்கார குட்டிகளுக்காக நீங்களே பதில் எளுதறீங்க – ’தமிழ் ரசிகர் விருப்பம்; என் வாழ்வின் திருப்பம்’ ன்னு. அத போல எளுதி உடுங்கண்ணே”

சுக்ரீவன் அடுத்த கேள்வியை தொடுத்தார் “எப்படிப்பட்ட பாத்திரமும் ஏற்று நடிப்பீர்களா?”

லீனா வெகுநேரம் யோசித்தாள் “ ’கடலும் நதியும்’ படத்துல பெரிய குடம் என்ற பாத்திரத்தை தூக்க சிரமப்பட்டேன்; அப்போது நான் சிறுமி; இப்போது உடல் பலம் வந்துவிட்டது. அண்டா மாதிரி பாத்திரமும் ஏற்று நடிப்பேன்”

சுக்ரீவன் ‘ஙே’ என்று சம்பங்கியை நோக்கினார் “எந்த பாத்திரமும் ஏற்று அந்த கேரக்டராவே மாறிடுவேன்’னு சொன்னதா போட்டுக்குங்க அண்ணா”

கேள்வி ‘எந்த மொழி படங்களில் நடிப்பீங்க?”

லீனா “நான் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எல்லா மொழிகளிலும் நடிச்சிருக்கேன். என்னோட ‘மேனகா பல்பொடி’ விளம்பரம் நாலு மாநில டிவிக்களில் வருதே!”

சுக்ரீவன் சுதாரித்தார் “எந்த மொழி வாய்ப்பு வந்தாலும், வாய்ப்பு தந்த தமிழில் நடிக்கவே ஆசை’ ன்னு போட்டுக்கரேன்.” என்றபடி அடுத்த கட்டம் வந்தார்.

“ லோ-பட்ஜெட் படத்தில் நடிக்கறோம்னு வருத்தப்படறீங்களா?”

லீனா “இன்று லோ-பட்ஜெட்; நாளை தமிழக பட்ஜெட்”

சுக்ரீவன் “அய்யோ………………….பயலுகதான் பஞ்ச் பேசி படுத்தறானுக. உனக்கு எவன் இப்படி சொல்லிக் கொடுத்தான். சரி சரி….. புது இயக்குனர்கள் முயற்சிக்கு துணை நிற்பேன்’னு போட்டுக்கரேன்” 

சுக்ரீவன் “சம்பங்கி………….நான் கொஞ்சம் மெருகேத்தி பேட்டியை போட்டுக்கறேன். லீனா வாயை கட்டுப்படுத்து. ஜாஸ்தி பேசறா. மற்றவன் என் போல் இருக்க மாட்டான்” என்றபடி எழுந்தார்.